தேனி: போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி கிராமத்தின் அருகே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மதுபானங்கள் விற்பனை விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்பதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மதுபானம் வாங்க வந்த நபர் ஒருவர் அவர் விரும்பிய மதுபானத்தின் விலையினை கேட்ட பொழுது கடையில் உள்ள விற்பனையாளர் விற்பனை விலையைக் காட்டிலும் 25 ரூபாய் அதிகமாக கேட்டுள்ளார். இதுகுறித்து மதுபானம் வாங்க வந்தவர் காரணம் கேட்டபொழுது உரிய பதில் தராமல் ஆணவமாக பதில் கூறியுள்ளார்.
அப்போதும் அவரை விடாமல் வாடிக்கையாளர் கேள்வி எழுப்பியதற்கு, 'உங்களுக்கு சந்தேகம் என்றால் டோல் ஃப்ரீ எண்ணை அழையுங்கள் என்றும் கூறி விற்பனையாளர்' பதில் கூற மறுத்துள்ளார். மேலும் இதுகுறித்து 'யாரிடம் வேண்டுமானாலும் கூறுங்கள்' என ஆணவமாக கூறியதுடன் அருகில் உள்ள நபர் ஒருவரை உதவிக்கு அழைத்துள்ளார்.