தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 6, 2020, 6:15 PM IST

ETV Bharat / state

அடிப்படை வசதிகள் வேண்டி டி. மீனாட்சிபுரம் மக்கள் ஆட்சியரிடம் மனு!

தேனி: நியாயவிலைக் கடை, துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் டி. மீனாட்சிபுரம் கிராமம் புறக்கணிக்கப்படுவதாக 100-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

theni
theni

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியத்திற்குள்பட்ட டி. மீனாட்சிபுரம் கிராம மக்கள் மற்றும் பென்னிகுயிக் விவசாயிகள் சங்கத்தினர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், “டி. மீனாட்சிபுரம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கின்றோம். எங்களில் பெரும்பாலானோர் பட்டியலின மக்களே. சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்தும், வேளாண்மைப் பணிகளையும் செய்துவருகின்றோம்.

ஆனால் எங்கள் கிராமத்திற்கு தனியே நியாயவிலைக் கடை கிடையாது. டி. மீனாட்சிபுரம் ஊராட்சி பெயரில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், நூலகம், சிறுவர் பூங்கா, ஆகிய அனைத்தும் செயல்படுவது உள்கிராமமான டி. அழகர்நாயக்கன்பட்டியில்தான்.

அதேபோல் கிராம நிர்வாக அலுவலகம் இருப்பது டி. சிந்தலைச்சேரியில். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ள தங்கள் கிராமத்தை தவிர்த்துவிட்டு துணை சுகாதார நிலையம், தானியக் கிடங்கு ஆகியவைகள் இருப்பது டி. ஓவுலாபுரத்தில்.

இதனால் கடந்த 50 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை தேவைகளின்றி, அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப் பெறாமல் சாதி - தீண்டாமையால் டி. மீனாட்சிபுரம் கிராமம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட திட்ட இயக்குநர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு, தேசிய பட்டியலின ஆணையத்திற்கும் புகார் மனு அளித்தும் தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து அரசும் எங்களைப் புறக்கணிக்கும்பட்சத்தில் 1981இல் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தென்பொத்தை ஊராட்சியிலுள்ள டி. மீனாட்சிபுரம் மக்கள் எடுத்து முடிவுகளைப்போல், தேனி மாவட்டம் தேவாரம் டி. மீனாட்சிபுரம் மக்களையும் முடிவெடுக்க தள்ளிவிடாதே என அரசுக்கு எச்சரிக்கைவிடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details