தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழை மாணவி கல்லூரி படிப்பைத் தொடர உதவிய விஜய் மக்கள் இயக்கத்தினர்..!

Vijay Makkal Iyakkam: தேனியில் குடும்ப சூழ்நிலை காரணமாகக் கல்லூரி படிப்பைத் தொடர முடியாத மாணவியின் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்திய விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vijay-makkal-iyyakam-helped-a-college-student-from-theni-district-to-study
ஏழை மாணவி கல்லூரி படிப்பைத் தொடர உதவிய விஜய் மக்கள் இயக்கத்தினர்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 4:31 PM IST

தேனி: பெரியகுளம் அருகே டி.வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பானுமதி. இவரின் மகள் பிரியதர்ஷினி சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி, தனது படிப்புக்கான கல்லூரி கட்டணத்தை மிகுந்த சிரமத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளும் செலுத்திப் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இறுதி ஆண்டுக்கான கல்லூரியின் தேர்வு கட்டணத்தை அவரால் கட்ட முடியாமல் போனது. எனவே, அவரை கல்லூரியில் தேர்வு எழுத அனுமதிக்காத நிலையில், படிப்பைப் பாதியில் விட்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார் பிரியதர்ஷினி. அதைத் தொடர்ந்து, கல்விக் கட்டணத்திற்கு தனக்குத் தெரிந்த பலரிடமும் உதவிகளைக் கேட்டுள்ளார்.

அப்போது, மாணவியின் ஏழ்மை நிலையை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், மாணவிக்குக் கல்வி உதவித் தொகையை அளிக்க முன்வந்தனர். நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் தற்போது பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. குறிப்பாக வெள்ளம் புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது களத்தில் இறங்கிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது, மாணவியின் கல்லூரி படிப்பைத் தொடர முன்வந்துள்ளது, வரவேற்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி மாவட்டத் தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், மாணவி இல்லத்திற்கு நேரில் சென்று மாணவியின் கல்லூரி படிப்பிற்காக, தேர்வு கட்டண உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் கொடுத்து உதவி செய்தனர்.

இதையடுத்து, தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை அறிந்து தனது படிப்பைத் தொடர கல்வி தேர்வு கட்டணத்தைச் செலுத்தி உதவி செய்த விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு மாணவி பிரியதர்ஷினி மற்றும் அவரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் மாணவி குடும்பத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:இயக்குநர் பா.ரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை! கே.ஜி.எப் தொடர்ந்து இன்று மாலை ஓசூரில்..!

ABOUT THE AUTHOR

...view details