பெரியகுளம்: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தேனி அருகே உள்ள கானாவிளக்கு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் தேனி அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கேண்டினுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு, 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுப்பது போல் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் உணவகம் மற்றும் கேண்டினை மாரிச்சாமி என்பவர் நடத்தி வருகிறார். ஒவ்வொரு வருடமும் இந்த உணவகம் மற்றும் கேண்டின் டெண்டர் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 12 ஆண்டுகளாக மாரிச்சாமி என்பவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டின் நடத்தி வருகிறார். மேலும், இந்தக் கேண்டின்கு தேவையான குடிநீர் மருத்துவமனையில் இருந்து பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் இந்த கேண்டினுக்கு கொடுக்கப்பட்டுள்ள மூன்று குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்குமாறு உத்தரவிட்டதாகவும், அதை தொடர்ந்து மூன்று குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் குடிநீர் இல்லாத நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நாள்தோறும் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து குடிநீர் பெற்று உணவகத்தை நடத்தி வந்தாகவும், தொடர்ந்து குடிநீர் இணைப்பு கிடைக்காததால் உணவகத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படிகிறது.
மேலும் இதுகுறித்து, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரத்தை சந்தித்து குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி தர கோரி மனு அளித்தபோது, அவர் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மாரிச்சாமி 16 லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாக கூறிய நிலையில் அதற்கு மீனாட்சிசுந்தரம் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து மாரிச்சாமி தனது நண்பர்கள் மூலமாக மீனாட்சி சுந்தரத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து முதல் கட்டமாக ஆறரை லட்ச ரூபாயும் அடுத்து இரண்டு நாட்கள் கழித்து மூன்றரை லட்ச ரூபாய் என பத்து லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும், மீதமுள்ள தொகையான ஆறு லட்ச ரூபாய் லஞப் பணத்தைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கல்லூரி முதல்வரின் குடியிருப்புக்கு சென்று கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.