தேனி மாவட்டம் கோட்டூர் அருகே கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வாகனம் ஒன்று சாலையோரம் உள்ள தென்னை மரத்தில் மோதி இன்று விபத்துக்குள்ளானது. கேரளாவில் இருந்து போடிமெட்டு வழியாக கம்பம் சென்றுகொண்டிருந்தபோது இவ்விபத்து ஏற்பட்டது. இதில் கேரளா ராஜாக்காடு பகுதியைச் சேர்ந்த ஓமனகுட்டன்(45) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவருடன் சென்ற பெண்கள், குழந்தைகள் உட்பட ஏழு பேர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான வாகனத்தில் தீ பரவியதால் பரபரப்பு - போடிமெட்டு
தேனி: கோட்டூர் அருகே விபத்துக்குள்ளான வாகனத்தைக் காவல் துறையினர் கொண்டுச்சென்ற வழியில், எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்பு வாகனம் மூலம் காவல்துறையினர் வீரபாண்டி காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்றனர். அப்போது, உப்பார்பட்டி விலக்கு அருகே எதிர்பாராத விதமாக வாகனத்தின் பின்புற டயர் உரசியதில் தீப்பற்றி மளமளவென வாகனம் முழுவதும் பரவியது.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தேனி தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். அதற்கு முன்பே கார் முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. காவல்துறை மீட்பு வாகனத்தில் வந்தவர்கள் சரியாக கவனிக்காததால் இந்த விபத்து நடந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விபத்தால் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.