தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது, வைகை அணை. 71 அடி உயரம் உள்ள வைகை அணையை நம்பி தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் இருக்கின்றனர். வழக்கமாக ஜூன் மாதத்தில் முதல் போக சாகுபடிக்கும், அக்டோபர் மாதம் இரண்டாம் போக சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இவ்வாண்டு போதிய பருவ மழை இல்லாத காரணத்தினால் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் கேரளாவில் பெய்த கனமழையால், முல்லைப் பெரியாறு அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மற்றும் வைகை அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் 59.51 அடியாக உயர்ந்தது.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் மாவட்டத்தில் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர் மற்றும் மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள 26,792 ஏக்கர் என மொத்தம் 45,041 ஏக்கர் பயன்பெறும் வகையில், முதற்போக பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.