தேனி: 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் இரண்டு நாள்களாகத் தேர்தல் பரப்புரை செய்துவருகிறார். இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் பரப்புரை செய்வதற்காக உதயநிதி ஸ்டாலின் வருகைதந்தார்.
அவரை வரவேற்க காத்திருந்த திமுகவினர், உதயநிதி ஸ்டாலின் வந்ததும், திடீரென தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்தின் அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்தனர். மேலும் ரவீந்திரநாத்துக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில், "குடியுரிமை, வேளாண் சட்ட மசோதாக்களுக்கு வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் மட்டுமே. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின், "இஸ்லாமியர்களுக்கு எதிரானது குடியுரிமை சட்ட திருத்த மசோதா, விவசாயிகளுக்கு எதிரானது மூன்று புதிய வேளாண் சட்டம். இந்த இரண்டு சட்ட மசோதாக்களையும் திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தவர் ஓ.பி. ரவீந்திரநாத் ஒருவர் மட்டுமே.
எனவே அவருக்கு கண்டனம் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற தேனி மக்களின் கோரிக்கையை ஏற்கிறேன்" எனக் கூறினார். இதையடுத்து சாலையில் அமர்ந்தவர்கள் கலைந்துசென்றனர்.