தேனியில் குளோரின் வாயு கசிந்து 2 பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி தேனி:கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப்பில் இருந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்ட தொட்டிகள் அமைக்கப்பட்டு அங்கு இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள காலனி பகுதியில் இருந்து கம்பம் நகருக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டு இருந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தண்ணீர் தொட்டியில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக குளோரின் வாயு கலந்த சிலிண்டரினை பொருத்தி சுத்திகரிப்பு பணியினை தொழிலாளர்கள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரின் இருந்து வாயு கசிந்ததால் அங்கு வேலை செய்த பணியாளர் முத்தீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அதனைக் கண்டதும் உடன் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக அவரை கம்பம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து அந்த தொழிலாளிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், குளோரின் வாயு கசிந்ததால் இருபதுக்கு மேற்பட்ட குடும்பங்களில் உள்ள வயது முதிர்ந்தோருக்கும், குழந்தைகளுக்கும் மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் கம்பம் தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து குளோரின் வாயு கசிவினை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரி சோதனை