வாகன போக்குவரத்தில் போலிகள், விதிமீறல்களை உடனடியாக கண்டறியவும், ஆவணங்களின் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காகவும் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது ஸ்மார்ட் கார்டு. இதுவரை காகித வடிவில் இருந்து வந்த வாகன பதிவுச் சான்றிதழ், லேமினேட் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமம் ஆகியவைகள் தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் முதல் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் மூலம் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ், வர்த்தக வாகன பதிவுச் சான்றிதழ், கடன் சான்றிதழ், கடன் ரத்து சான்றிதழ், பெயர் மாற்றம் உள்ளிட்ட போக்குவரத்து சார்ந்த அனைத்து தேவைகளும் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கப்படுகின்றன.
வாகன பதிவுச் சான்றிதழுக்கான ஸ்மார்ட் கார்டில், வாகனப்பதிவு எண், இஞ்சின் எண், சேஷிஸ் எண், பதிவு செய்த நாள், செல்லுபடியாகும் காலம், வாகன உரிமையாளரின் பெயர், முகவரி, வாகனத்தின் மாதிரி, எரிபொருள் தன்மை, மாசு அளவு, தயாரிப்பாளர் விவரம், வாகனம் தயாரிக்கப்பட்ட வருடம், இருக்கைகளின் எண்ணிக்கை, வங்கிக் கடன்குறித்த விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் இடம் பெற்றிருக்கும்.
ஓட்டுநர் உரிமத்தில் வாகன ஓட்டியின் புகைப்படம், பெயர், முகவரி, வயது, அனுமதிக்கப்பட்ட வாகனம் இயக்கம், செல்லத்தக்க காலம் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். ஏற்கனவே காகித வடிவில் உள்ள பதிவுச் சான்றிதழ், லேமினேட் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை தற்போது கட்டணம் செலுத்தி புதிய ஸ்மார்ட் கார்டாக மாற்றிக்கொள்ளலாம்.
மைக்ரோ சிப், ஹாலோகிராம், யூவி இமேஜ் வியூவர், எம்பெட்டெட் சிப், க்யூ ஆர் கோடு என பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ஸ்மார்ட் கார்டை போலியாக தயாரிக்க முடியாது. இது தவிர தகவல் திருட்டு, மாற்றியமைக்க முடியாத பாதுகாப்பு அம்சம் என நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் கார்டை வாகன ஓட்டிகள் சுலபமாக எடுத்துச் செல்லலாம்.
ஆண்ட்ராய்டு போன் அல்லது கம்ப்யூட்டர், லேப்டாப்பில் உள்ள கேமராக்கள் மூலம் ஸ்மார்ட் கார்டில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் போதும், வாகனத்தின் அனைத்து விவரங்களும் கிடைத்துவிடும். மேலும் தணிக்கையின்போது காவல், வட்டார போக்குவரத்து அலுவலர்களிடமும் இதனை காண்பித்து விட்டுச் செல்லலாம்.