தென்காசி:தென் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அருவிகளில் தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளத்தின் தீவிரம் குறையாமல் இருப்பதால் இன்றும் (டிச.18) அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டு, ஆற்றங்கரை அருகில் யாரும் செல்ல வேண்டாம் என்றும் ஆற்றுப்படுகைகளில் வசிப்போர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று (டிச.17) கனமழை மழை தொடங்கியது. இதனால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
மேலும், குற்றாலம் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் காற்றாற்று வெள்ளம் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பழைய கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளது. இதனால் மீட்பு பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் முழுமையான பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.