தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள முறுக்கோடை பகுதி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் பொன்னுச்சாமி-பெருமாயி தம்பதியினர். இவர்களுக்கு பட்டுராஜன் (26), சௌந்தரராஜன் (24) என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மது அருந்தி வீட்டிற்கு வந்த பட்டுராஜன், தனது தாயார் பெருமாயி, தம்பியுடன் சண்டையிட்டதாகத் தெரிகிறது.
அப்போது, 'தனது பங்கு சொத்தை கொடுத்துவிடுங்கள், இல்லை என்றால் உங்களை கொன்றுவிட்டு அனைத்து சொத்தையும் சொந்தமாக்கிக் கொள்வேன்' என்று பட்டுராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அவரது தம்பி சௌந்தரராஜன், பட்டுராஜன் தலை மீது கல்லைத் தூக்கிப்போட்டார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த பட்டுராஜனை மீட்டு, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பட்டுராஜன் உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வருசநாடு காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணன் மீது கல்லைத் தூக்கிப் போட்டேன் என்று சௌந்தரராஜன் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.