தேனி:பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 20 நாட்களாக அறுவடைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யும் நெல்லை, கொள்முதல் செய்ய 2 அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து கடந்த 10 நாட்களாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு நெல்லை கொள்முதல் செய்யும் மையங்களுக்கு அளிக்கப்பட்ட விதிகளால் விவசாயிகள் நெல்லை தனியாருக்கு குறைந்த விலையில் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர். இதுகுறித்து நெல் விவசாயி ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ மேல்மங்கலம் பகுதியில் இந்த ஆண்டு இரண்டாம் போக நெல் சாகுபடியில் பெரும்பாலான விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் அடைந்து ஒரு ஏக்கருக்கு 75 முதல் 80 மூடைகள் நெல் அறுவடை செய்து நல்ல மகசூல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க:பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்த துணை தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!
இதனிடையே அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்யும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஏக்கர் ஒன்றுக்கு 40 கிலோ எடையில் 60 மூடைகள் மட்டுமே தமிழக அரசு கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து 60 மூடைகளுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்படாததால் மீதம் உள்ள நெல் மூட்டைகளை விவசாயிகள் தனியாருக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.