தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலில், ஒரு சில வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட குளறுபடியால் மறு வாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, மக்களவைத் தேர்தலின் கடைசிகட்ட வாக்குப்பதிவு நாளான மே 19ஆம் தேதி, தேனி மக்களவைத் தொகுதியில் உள்ள பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி, ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் ஆகிய இரு வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ் மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே, திருவள்ளூரில் இருந்து தேனிக்கு நேற்று, வாக்குப் பதவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள்- 20, வாக்குப்பதிவை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு இயந்திரம்- 30 என மொத்தம் 50 இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகள் பேட்டிகள் சேமிக்கும் காட்சி இவற்றை, அதிமுக, திமுக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று சரிபார்க்கப்பட்டு தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ், மறு வாக்குப்பதிவிற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாவும், இவற்றை அனைத்து கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு பின்னர் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அனைத்து கட்சியினரின் கோரிக்கையின்படி மறு வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு ஏன் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தேர்தல் அலுவலர், இரண்டு வாக்குச்சாவடிகளில் மக்களவை, இடைத்தேர்தல் என நான்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளன என்றும், கையிருப்பு அதிக அளவில் இருந்தால்தான் சம வாய்ப்புடன் (RANDOM) வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என்றும் விளக்கமளித்தார்.
ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி கோவையில் இருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டுவரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், இன்று தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளர் தலைமையில் கூடுதலாக காவல்துறை பணியமர்த்தப்பட்டிருந்தனர்.