தேனி மாவட்டம், மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதியில் அண்மையில் வனத்துறை பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அழுகிய நிலையில் புலி ஒன்று இறந்து கிடப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து, வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் தேசிய புலிகள் காப்பக விதிகளின் நெறிமுறைப்படி, பிரேத பிரிசோதனை மேற்கொண்டனர்.
மதுரை கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் சுப்ரத் மொஹ்பத்ரா, மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லே, உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் முன்னிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவ அலுவலர் அசோகன், கால்நடை அறுவைச் சிகிச்சை உதவியாளர்கள் வைலன், கலைவாணன், பிரபாகரன் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் இறந்த புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.