மதுரை மேலப்பொன்னகரம் பகுதியை சோந்தவர் நாகு என்ற நாகேந்திரன்(48). முன்னாள் ரவுடியான இவர் தற்போது ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனுர் பகுதியில் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று முன்தினம் (நவம்பர் 20) கழுத்தறுக்கப்பட்ட நிலையில் நாகேந்திரன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இக்கொலை சம்பவம் குறித்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, உசிலம்பட்டி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்றுவந்தது.
விசாரணையில் நாகேந்திரனை கொலை செய்தது, மதுரையைச் சேர்ந்த உமாசங்கர், சாய்பிரசாத்(40) மற்றும் விக்கிரமங்கலம் அருகே உள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்பாண்டியன்(40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த தனிப்படையினர், நிலக்கோட்டை அருகே பொதுமக்கள் உதவியுடன் மூன்று பேரையும் கைது செய்து, காவல்நிலையதிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் இறந்த நாகேந்திரனுடன் சேர்ந்து குற்றவாளிகள் மூவரும் பல வருடங்களுக்கு முன்பு சில கொலை சம்பவங்களில் ஈடுபட்டு கூட்டாக இருந்து வந்ததும், 2007ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை சம்பவத்தில் உமாசங்கருக்கும், நாகேந்திரனுக்கும் ஏற்பட்ட விரோதம் காரணமாக நாகேந்திரனை கொலை செய்தது தெரியவந்தது. தற்போது கொலையாளிகள் மூன்று பேர் மீது, ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு!