தேனி:தேனி மாவட்டம் தேவதானபட்டியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியின் ஆசிரியை ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவன் ஒழுங்கீனமாக இருப்பதாக அவனின் பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த, அந்த மாணவன் வகுப்பறைக்கு வரும்போது கையில் கத்தியோடு வந்து, சம்மந்தபட்ட ஆசிரியையை குத்த முயற்சி செய்துள்ளனர்.
இதைக் கண்ட சக ஆசிரியர்கள் அவனை தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த மாணவன் ஆசிரியையின் வாகனத்தை கத்தியினால் குத்தி சேதபடுத்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
மீண்டும் மறுநாள் வந்து அந்த மாணவன், ஆசிரியையை கத்தியால் குத்த முயன்றுள்ளார். இதனால், ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இருப்பினும், அந்த ஆசிரியை உயிர் பயத்தில் பள்ளிக்கு வரமால் இருக்கிறார். இதேபோன்று, பெரியகுளம் அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசி கிண்டல் செய்யும் நிகழ்வும் நடந்துள்ளதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
தொடர்ந்து அத்துமீறும் மாணவர்கள்!
இந்த சம்பவங்கள் ஒருபுறம் என்றால், தேவாரம் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பணியிட மாறுதல் பெற்று பள்ளிக்கு வந்த ஆசிரியர் ஒருவர், பள்ளியில் மாணவர்கள் புத்தகம் கொண்டு வராமல் இருப்பதை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஒரு மாணவர் ஆசிரியரை பள்ளி வகுப்பறையிலே சக மாணவர்கள் முன்னிலையில் கண்ணத்தில் அறைந்து உள்ளார்.