தேனியில் விவசாய தளவாட பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது தேனி:கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில், மகேந்திரன் என்பவர் விவசாயத்திற்கு தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு (ஜன.20) வழக்கம்போல் தனது கடையை அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதனையடுத்து எதிர்பாராத விதமாக கடையில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கி உள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள், கடை உரிமையாளரான மகேந்திரனுக்கும், காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்பம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதிகப்படியான தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், உத்தமபாளையத்தில் இருந்து தீயணைப்புத் துறை வாகனத்தையும் வரவழைத்தனர். பின்னர் 2 தீயணைப்பு வாகனங்களைக் கொண்டும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலான போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
அதேநேரம் தீயணைப்புத் துறையினரின் விரைவான நடவடிக்கையால், குடியிருப்பு பகுதி மற்றும் அருகில் உள்ள பெட்ரோல் பங்குக்கு தீ பரவாமல் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தீ விபத்தால் சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. மூதாட்டி உட்பட இருவர் பத்திரமாக மீட்பு!