தேனி:ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் மதுரை கோட்டத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அரசுப் போக்குவரத்துத் துறை சார்பாகச் சீருடை மற்றும் தையல் கூலி வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் தேனி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு சீருடை துணியைக் கொடுத்து சீருடை தைத்து அணிந்து வரும்படி கூறியுள்ளனர். இந்நிலையில் இதற்குத் தையல் கூலி கொடுத்தால் மட்டுமே தன்னால் சீருடை தைத்து அணிந்து வர முடியும் என்று கூறி கடந்த ஐந்து வருடங்களாக பாலகிருஷ்ணன் சீருடை இல்லாமலேயே அரசு பேருந்தை இயக்கி வந்துள்ளார்.
தற்போது தேனி அரசு பேருந்து பணிமனையிலிருந்து இவருக்குப் புதிதாகச் சீருடை கொடுத்து இதைத் தைத்து அணிந்து வந்தால் மட்டுமே பேருந்தை இயக்க முடியும் என்று கூறிய நிலையில், சீருடை துணியைத் தைக்காமல் வேஷ்டி போல் கட்டிக் கொண்டும் சால்வை போல் போர்த்திக் கொண்டும் பணிக்கு வந்த இவரைப் பேருந்து இயக்க அனுமதி மறுக்கப்பட்டது.
அரசு வழங்கும் சலுகைகள் முறையாகக் கிடைக்கப் பெற வேண்டும் எனக் கூறி தையல் கூலி கொடுத்தால் மட்டுமே சீருடையைத் தைத்து அணிந்து வர முடியும் எனத் தேனி அரசு பேருந்து பணி மனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். ஓட்டுநரின் இந்த நூதன போராட்டத்தை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தபடி சென்றனர்.
இதையும் படிங்க: பழனி கோயிலில் மொட்டை அடிக்கும் இடங்களில் கூடுதல் கட்டணம் வசூல் - பக்தர்கள் தர்ணா!