தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருந்து ஆளுநரான காந்தியின் மகன் மனோஜ்குமார் (33).
மருத்துவரான மனோஜ்குமார் கடந்த 2018ஆம் ஆண்டு, மதுரை மாவட்டம் வெள்ளளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதே ஆண்டு மனோஜ்குமார், அவரது அக்கா மகள் நிவேதாவுடன் திடீரென காணாமல் போனார்.
நித்தியானந்தாவால் ஈர்க்கப்பட்ட மனோஜ் குமார், அவரது அக்கா மகளுடன் திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, மனோஜின் தந்தை காந்தி அங்கு சென்று விசாரித்ததில், அவர்கள் பெங்களூருவில் உள்ள பிடாடி ஆசிரமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பின் காந்தியும் அவரது மனைவியும் அந்த ஆசிரமத்திற்குச் சென்றனர்.
ஆனால், அங்கிருந்து நித்தியின் சீடர்கள் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டதால், காந்தி அவர் குடும்பத்தோடு அங்கு தர்ணா போராட்டம் மேற்கொண்டார்.
பின்னர் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் காந்தி, தனது மகன் மற்றும் பேத்தியை மீட்டுத் தரவேண்டும் எனப் புகார் அளித்தார். அதையடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து பிடாடி ஆசிரமத்திற்குச் சென்று இருவரையும் மீட்டு வந்தனர்.
இந்நிலையில் மருத்துவர் மனோஜ்குமார், தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இதற்கிடையே சமீபத்தில் மனோஜ் குமார் மீண்டும் காணாமல் போனார். இது குறித்து அவரது தந்தை காந்தி பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.