TN Govt Pongal Gift: 'சர்க்கரைக்கு பதில் வெல்லம் கொடுங்க' - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை! தேனி:தேனி மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதியில் அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை வழங்காமல் இருப்பதால் விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பாமல் கரும்பில் இருந்து வெல்லம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
அதிலும் நவம்பர், டிசம்பர் மாதத்தில் சபரிமலை சீசன் மற்றும் ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்கு அதிக அளவில் வெல்லம் விற்பனையாகும். அதன் உற்பத்தியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டாண்டுகளாக கரோனா பரவலால் பல்வேறு விழாக்கள் தடை செய்யப்பட்டதால் விவசாயிகள் கரும்பு பயிரிட்டு வெல்லம் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் உற்பத்தி செய்த வெல்லம் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு கரோனா நோய் தொற்று கட்டுக்குள் வந்து எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் தொடர்ந்து அனைத்து பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் 'தை திருநாளாம் பொங்கல்' திருநாளை முன்னிட்டு வெல்லத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் பொங்கல் விழாவிற்காக கரும்பை வெட்டி வெல்லம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
எனவே கடந்த ஆண்டு 42 கிலோ எடை கொண்ட மூட்டையின் விலை ரூ.1,400 முதல் 1,500 வரை மட்டுமே விலை போன நிலையில் தற்பொழுது ஒரு மூடை வெல்லத்தின் விலை ரூ.1,700 விலை ஏற்றம் கண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உரவிலை, வேலையாட்களின் கூலி, கரும்பை உற்பத்தி செய்ய ஆகும் செலவு உள்ளிட்டவைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தற்போது ரூ.1,700 விற்றாலும் விவசாயிகளுக்கு போதிய வருவாய் என்பது கிடைக்கப்படாமல் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில்:கரும்பு பயிரிட்டு 12 மாதங்கள் உரமிட்டு, நீர் பாய்ச்சி விளைவித்து அதனை வெட்டி வெல்லமாக தயாரித்து போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு இதற்கு ஒரு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு போல பொங்கல் பரிசு தொகுப்பில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வெல்லத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமா? என எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அரசு பொங்கல் பரிசாக வெல்லத்தை வழங்கினால் தங்களுக்கு விலை உயர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மேலும் பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கரும்பு விவசாயிகள்
நிலையான விலை இல்லாத நிலையில் கரும்பு விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதால் அரசு கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:’திமுகவை வேரோடு வீழ்த்திக் காட்டுவோம்’ - ஈபிஎஸ் தரப்பு உறுதிமொழி