தமிழ்நாடு முழுவதும் அக்னி நட்சத்திரம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. தேனி மாவட்டத்திலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் நேற்று மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இரவில், இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் காற்றின் வேகம் சற்று அதிகரித்து சூறைக்காற்றாக வீசத்தொடங்கியது. இதனால் கூடலூர் அருகே வெட்டுக்காடு, வேலங்காடு உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த பல ஏக்கர் பரப்பளவிலான வாழை, தென்னை மரங்கள் நாசமாகின. மேலும், குடியிருப்பு பகுதிகளில் வீட்டின் மேற்கூரைகளும் சேதமாகின.
கூடலூரைச் சேர்ந்த மொக்கராசு என்பவருக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேந்திரம் ரக வாழை மரங்கள் இந்த காற்றிற்கு முற்றிலும் நாசமாகின. இதேபோல், மாயாண்டி, சேகர் ஆகிய விவசாயிகளின், செவ்வாழை, நாழிபூவன் உள்ளிட்ட வாழைகள் சேதமாகியுள்ளன. சுழற்றி அடித்த காற்றிற்கு ஈடு கொடுக்க முடியாமல், குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் மின்கம்பங்கள் மேல் விழுந்து கிடக்கின்றன.
அதேபோல், சுமார் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் இந்த காற்றினால், சேதமடைந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “திடீரென அடித்த காற்றால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வாழைகள் முற்றிலும் நாசமாகியுள்ளது. இதனால் சுமார் 1 கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இழப்பீடுகளை கணக்கீடு செய்து விரைவில் நிவாரணத்தொகை வழங்கிட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.