பெரியகுளம் சுற்றுவட்டாரங்களில் நெல் விளைச்சல் அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி! தேனி: தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். இந்த ஆண்டு பருவமழை உரிய நேரத்தில் பெய்ததால், நெற்பயிர்கள் செழிப்பாக விளைந்து நல்ல மகசூல் கிடைத்துள்ளது. தற்போது முதல்போக நெல் அறுவடைப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு முதல் போக சாகுபடியின்போது தொடர்ந்து மழை பெய்ததால் மகசூல் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு முதல் போக சாகுபடியில் ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டை நெல் அறுவடையாகி வருகிறது.
மேலும், அறுவடை தொடங்கிய மூன்று நாட்களிலேயே தமிழக அரசு தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்து வருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் ஒரு கிலோ நெல்லுக்கு ஒரு ரூபாய் விலை உயர்வு வழங்கி வருகின்றன என்றும்; பயிர் மற்றும் உரம் விலை, நடவுப்பணி கூலி ஆகியவை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கிலோவுக்கு மூன்று ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அனைத்து ஊர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக செல்ல உத்தரவு!