தேனி:பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திர நாத்திற்குச் சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. அத்தோட்டத்தின் சோலார் மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அலுவலர்கள் ஓ.பி. ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்த ராமநாதபுரத்தைச்சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கடுமையாகத்தாக்கி, அவரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், ஓ.பி. ரவீந்திரநாத் தோட்டத்தில் பணியாற்றும் மேலாளர்களான ராஜவேல், தங்கவேல் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், வனத்துறையினர் தோட்டத்தின் உரிமையாளரான ஓ.பி. ரவீந்திரநாத் எம்.பி. மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அவரின் தோட்டத்தொழிலாளர்களைக் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக்கண்டித்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பவர்கள் சங்கத்தின் சார்பாக, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் மீதும், தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், ஆட்டுக்கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக் கூறியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுத்தை உயிரிழந்த விவகாரம்: தேனி எம்.பி.ஓ.பி.ரவீந்திரநாத்தை கைது செய்யக்கோரி போராட்டம் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சரவணன், 'வனத்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அலெக்ஸ் பாண்டியன் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தோட்டத்தின் உரிமையாளர் எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும். பொய் வழக்கு போட்ட வனத்துறை அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.
சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தற்போது தேனி மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசின் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேருந்துகள் இயக்கம்