தேனி: பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக அரசு உத்தரவின் பேரில் சாலையோரங்களில் பலன் தரக்கூடிய 300க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் நடப்பட்டு கிராம மக்கள் வளர்த்து வந்தனர்.
வளர்க்கப்பட்ட மரங்களிலிருந்து விளையும் புளியம் பழங்களால் ஊராட்சி நிர்வாகத்திற்கு வருடம் தோறும் ஒரு லட்ச ரூபாய் முதல், இரண்டு லட்ச ரூபாய் வரை வருவாய் தந்தது. இந்நிலையில் மேல்மங்கலம் ஊராட்சி நிர்வாகம் பெருமாள் கோயில் தெருவில் மூன்று புளிய மரங்களை வருவாய்த்துறையினரிடம், முறையான அனுமதி பெறாமல் இரவோடு இரவாக வெட்டி கடத்தி உள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என அரசு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கிராம மக்கள் வளர்த்த மரத்தை ஊராட்சி நிர்வாகமே வெட்டி கடத்தி உள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.