தேனி:ஆண்டிபட்டி அருகே ராஜேந்திர நகரில் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தேனி மாவட்டம், பங்களாமேடு பகுதி சோலைமலை அய்யனார் தெருவைச் சேர்ந்த விஜயபானு (47), கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையே தேனி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு விஜயபானு போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக ரகசிய புகார் வந்துள்ளது. இந்த நிலையில், மாவட்ட கல்வி அலுவலகத்தில் விஜயபானுவின் சான்றிதழ்களை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது 12ஆம் வகுப்பு சான்றிதழை போலியாகக் கொடுத்து பணியில் சேர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கலாவதி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர் விஜயபானு மீது புகார் தெரிவித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கண்டமனூர் போலீசார் அரசு நிர்வாகத்தை ஏமாற்றுவது, போலி ஆவணம் தயார் செய்தது, போலி ஆவணம் மூலம் அரசுப் பணியில் சேர்ந்தது, உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
போலிச் சான்றிதழ் கொடுத்து பெண் ஆசிரியை பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததும், தற்போது ரகசிய புகாரின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டபோது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவமும், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:மதுரவாயலில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி வெட்டி படுகொலை.. போலீசார் தனிப்படை அமைத்து தேடல்!