சின்னூர், பெரியூர் மலைகிராம மக்கள் பாதுகாப்பாக செல்ல கல்லாற்றில் ஆய்வுப் பணிகள் துவக்கம் தேனி: பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சின்னூர், பெரியூர் என இரண்டு மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் இருந்தாலும், கிராம மக்களின் போக்குவரத்து என்பது பெரியகுளம் பகுதியை சார்ந்தே உள்ளது.
இதனால் இந்த மலைக் கிராம மக்கள் சாலை வசதியின்றி தவித்து வருவதும், மழைக் காலங்களில் உணவுப் பொருட்கள் கூட வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ஆற்று வெள்ளத்தில் ஒரு குடும்பத்தினர் சிக்கிக் கொண்ட நிலையில் கிராம மக்கள் அவர்களை போராடி மீட்டனர்.
இந்நிலையில், சாலை வசதி இல்லாததால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் தொடர்ந்து சாலை, மற்றும் கல்லாற்றை கடப்பதற்கு பாலம் அமைத்து தர வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் சாலை போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் சின்னூர் மலை கிராமத்திற்கு செல்லும் கல்லாற்று பகுதியில் ஆய்வு செய்த குழுவினர், அதனை அளவீடு செய்யும் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், ஆய்வுக்கு வந்த உதவி பொறியாளர் மணிகண்டன் கூறுகையில், "சின்னூர், பெரியூர் மலை கிராமத்திற்கு சாலை வசதி அமைப்பதற்காக ஏற்கனவே நடைபெற்ற அளவீடு பணிகளை கொண்டு மீண்டும் மறு ஆய்வு செய்து அதன் பின்பு திட்ட மதிப்பீடு செய்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்து நிதியைப் பற்றி விரைவில் மலை கிராமங்களுக்கு சாலை வசதி மற்றும் பாலம் கட்டும் பணிகள் துவங்கப்படும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து வெள்ளகவி ஊராட்சி மன்ற தலைவர் புருஷோத்தமன் கூறுகையில், "தங்களது மலை கிராம பகுதிக்கு எந்தப் பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் மிகவும் சிரமப்படுவதாகவும், மழை காலங்களில் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் மிகவும் ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தங்களது மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி மற்றும் கல்லாற்றக் கடப்பதற்கு பாலம் அமைத்து தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை தற்போது மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அளவீடு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே தமிழக அரசு நிதி ஒதுக்கி இப்பணியை விரைந்து முடித்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:ராஜஸ்தானில் ஒரு யோகி - யார் இந்த மகந்த் பாலக்நாத்? முதலமைச்சராவாரா?