தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில், மாவட்ட எல்லைப் பகுதியான போடி - முந்தல் பகுதியில் உள்ள வாகன சோதனை சாவடி வழியாக கேரளா மாநிலத்திலிருந்து வரும் வாகனங்கள், காட்ரோடு வாகன சோதனை சாவடியில் பிற மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மேலும், தேனி மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கைகள், ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, உரிய வாகன அனுமதி சீட்டு பெறப்பட்டு, அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் ஏற்றிக்கொண்டு பயணம் செய்யும் வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்திடவும், வாகனங்களின் அனுமதி சீட்டு விதிமுறைகளை சரிவர கடைபிடிக்காத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்திடவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.