தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கேத்தன் பட்டேல் (41). இவர் பெரியகுளம் சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிம்மில் நேற்று(செப் 6) பணம் எடுப்பதற்காக சென்றபோது, இயந்திரத்தின் அருகே 2,000 ரூபாய் நோட்டுக்கள் கிடப்பதைப் பார்த்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார். அதனடிப்படையில் அங்கு சென்ற தேனி நகர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி ஆய்வு செய்ததில், வங்கி ஊழியர் தவறவிட்ட நான்கு லட்சம் ரூபாய், வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல் நேற்று முன்தினம் (செப் 5) கம்பம் கருப்பையா பிள்ளை நகைக்கடை அருகில் கிடந்த நான்கு கிராம் தங்க மோதிரத்தை கம்பம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், அப்துல் காதர் ஆகியோர் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு, கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணியிடம் கொடுத்தனர். விசாரணையில், கம்பம் ஜல்லிக்கட்டுத் தெருவில் வசிக்கும் முனிராஜ் என்பவரின் மோதிரம் என உறுதிபடுத்தி அவரிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
மேலும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி, கம்பம் ஓடைக்கரைத் தெருவில் உள்ள ஏடிஎம் மையத்தில் தவறவிட்ட ஒரு லட்சம் பணம், வங்கிக் கணக்கு புத்தகத்தை ராயப்பன்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன், ஆண்டிபட்டி மேலபூசானுத்து கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். வங்கிக் கணக்கு புத்தகத்தில் இருந்த விவரங்களின் அடிப்படையில் விசாரணை செய்த காவல் துறையினர் கம்பம் ஆலமரத் தெருவில் வசிக்கும் பகவதிராஜ் என்பவரிடம் ஒப்படைத்தனர்.