தேனி:பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையானது பெரியகுளம் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றன. அதோடு மட்டுமல்லாமல் 3,500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் இதன் மூலம் நேரடியாக பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழையின் போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவை அடைந்து வரும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பொய்யாததால் அணையானது முழு கொள்ளளவை எட்டவில்லை. அணையின் கொள்ளளவான 126.28 அடியில் இருந்து தற்பொழுது அணையின் நீர்மட்டம் 78 அடியாக உள்ளன.
மேலும், வருடம் தோறும் முதல் போக பாசனத்திற்காக அக்டோபர் 15ஆம் தேதி சோத்துப்பாறை அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், தற்பொழுது அணைக்கு முற்றிலும் நீர் வரத்து இல்லாத நிலையில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றன.
மீண்டும் மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவை எட்டினால் மட்டுமே, இந்த ஆண்டும் உரிய நேரத்தில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படுமா என விவசாயிகளிடையே சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், மழை பெய்யாமல் போனால் பெரியகுளம் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழலும் இருக்கிறது.
இதனால் அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் இருந்து தற்பொழுது அணையின் நீர்மட்டம் 78 அடியாக உள்ள நிலையில் குடிநீருக்காக நீர் திறந்து விடப்பட்டுள்ளன. அணைக்கு நீர் வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அணையில் நீர் இருப்பு 31.58 மில்லியின் கன அடியாக உள்ளது. பாசனத்திற்கு நீர் திறக்க 30 நாட்களே உள்ள நிலையில் அணையில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் அணையின் நீர்மட்டமானது சரிந்து வருகின்றன. இதனால், அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:அண்ணாவின் 115வது பிறந்தநாள்; உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கனிமொழி!