விவசாயத்தை பிரதானமாக கொண்டிருக்கும் தேனி மாவட்டத்தில் சமீபகாலமாக பட்டு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். தேனி மாவட்டத்தில் உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பெருமாள் கவுண்டன்பட்டி, பள்ளபட்டி, கொடுவிலார்பட்டி, போடி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாதம்தோறும் வருமானம் தரக்கூடிய குறுகியகால தொழிலாகத் திகழ்வதால் பட்டுப்புழு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மெல்பெரி தாவரத்தை மட்டும் உண்டு, முட்டை பொறித்த எட்டாவது நாளில் இருந்து 23 நாட்கள் வரை மட்டுமே வளரக்கூடிய பட்டுப்புழு கூடாக சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. " ஒரு செடி" "ஒரு புழு" "ஒரு கூடு" என்ற ஒற்றைப் ஃபார்முலாவில் வளர்க்கப்பட்டு குறுகிய காலத்தில் வருமானம் ஈட்டி விவசாயிகளின் நண்பனாக திகழ்கிறது பட்டுப்புழு வளர்ப்பு. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு ஊசி ஈ தாக்குதலால் பட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பட்டுப்புழு கூடு கட்டுவதற்கு 5 நாட்கள் இருக்கும் நிலையில் புழுக்களை ஊசி ஈக்கள் தாக்குகின்றன. அப்படித் தாக்கும்போது புழுக்களின் உடலில் முட்டையிடும். அந்த முட்டைகள் பட்டுப்புழு கூடு கட்டும் நேரத்தில் ஆயிரக்கணக்கான ஊசி ஈக்களாக வெளியே வருகிறது. இதனால் பட்டுப்புழு கூடு கட்டாமலேயே இறந்துவிடும் என விவசாயிகள் கூறுகின்றனர் .
இதுகுறித்து பள்ளபட்டியை சேர்ந்த பட்டுப்புழு வளர்ப்பு விவசாயி சீனிராஜ் கூறுகையில், 20 வருடங்களாக பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளேன். பட்டுப்புழு வளர்ப்பு என்பது ஒவ்வொரு நிலையிலும் கவனமாக வளர்க்க வேண்டும். சமீபத்தில் பட்டுப்புழுக்களை ஊசி ஈக்கள் தாக்குவது அதிகரித்துள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு பிறகு வந்துள்ள ஊசி ஈக்களால் பட்டுப்புழு வளர்ப்பு பாதிக்கப்படுகிறது. சென்ற முறை நான் வளர்க்கப்பட்ட 75 முட்டையில் 80 கிலோ பட்டு எடுக்கப்பட்டு விலை கிலோவிற்கு ரூ. 400 வரை கிடைத்தது. இதன் காரணமாக நல்ல லாபம் கிட்டியது. ஆனால் இந்த வளர்ப்பில் ஊசி ஈ தாக்குதலால் பட்டுக்கூடு குறைவாகவே இருக்கும் சூழலில் உள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்.