தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி, உப்புக்கோட்டை, பெருமாள் கவுண்டன்பட்டி, டொம்புச்சேரி, பள்ளப்பட்டி, அரண்மனைபுதூர், ஆண்டிபட்டி, கம்பம், போடி, பெரியகுளம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுவருகின்றனர். சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஏறக்குறைய ஆயிரம் விவசாயிகள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
மல்பெரி தாவரத்தை மட்டும் உண்டு வாழும் பட்டுப்புழு, முட்டை பொரித்த எட்டாவது நாளிலிருந்து 23 நாள்கள் பராமரிப்பில் கூடாக தயாராகி சந்தைப்படுத்தப்படுகின்றன. குறுகிய காலத்தில் வருமானம் தரக்கூடிய தொழில் என்பதால் தேனி மாவட்ட விவசாயிகள் அண்மையில் இந்தத் தொழிலில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தீநுண்மி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பட்டுப்புழு வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தேனி மாவட்ட பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் கூறுகையில், ''கரோனா பாதிப்பிற்கு முன்பாக ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.500 வரை சந்தை விலை கிடைத்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, போக்குவரத்து முடக்கப்பட்டதால் வெளிமாவட்ட வியாபாரிகளின் வருகை குறைந்தது.
வருகின்ற ஒரு சில வியாபாரிகளும், ரூ.180 முதல் 200 வரை என சொற்ப விலைக்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த விலை பராமரிப்புச் செலவுக்குக்கூட கட்டுப்படியாகாத நிலையில் உள்ளது.
மற்ற விவசாயப் பொருள்களைப் போல இது இருப்புவைத்து சந்தைப்படுத்தும் தொழில் அல்ல. பட்டுப்புழு, கூடாகி, நூல் திரித்த ஒரு வாரத்திற்குள் விற்றுவிட வேண்டும். இல்லையென்றால் பயனற்றுபோய்விடும்'' என்கின்றனர்.
கரோனாவால் வாழ்வாதாரமின்றி தவிக்கும் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் மேலும், "பொதுவாக மல்பெரி தோட்ட பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மனைக்கூடம் பராமரிப்பு, தொழு உரம், செயற்கை உரம், இலை வழி தாவரங்களின் ஊட்டச்சத்து மருந்து, கூலி ஆள்கள் என ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை செலவாகிறது. கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதால் இந்தப் பராமரிப்பு செலவும் சற்று அதிகரிக்கும்.
எனவே பட்டுக்கூடு கிலோ ரூ.500-க்கு சந்தையில் கொள்முதல் விலை கிடைத்தால் மட்டுமே கட்டுப்படியாகும். ஊரடங்கு உத்தரவில் விவசாயப் பணிகள், விளைப்பொருள்கள் எடுத்துச் செல்வதற்குத் தடை இல்லை என்று கூறும் அரசு, கர்நாடகாவில் பட்டுநூல் சந்தையைத் திறக்க அம்மாநில அரசு அனுமதித்ததுபோல, தமிழ்நாட்டிலும் பட்டுநூல் சந்தை செயல்பட அனுமதிக்க வேண்டும்.
மேலும் ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவித்துவரும் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கும் காப்பீடு, நிவாரண உதவிகளை செய்துதர வேண்டும் என்ற தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்" எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
உற்பத்தி செய்திடும் பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம், நிவாரண உதவிகள் செய்துதர வேண்டும் என்பதே பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவர்களின் கோரிக்கைக்கு மாநில அரசு செவிசாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
இதையும் படிங்க:கண்டுகொள்ளப்படாத மண்பாண்டங்கள்: நொறுங்கிய மண்பாண்டத் தொழில்!