தேனி:கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பசுவாமி திருக்கோயில் தரிசனத்திற்கு, ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தேதியில் இருந்து, தை மாதம் நடைபெறும் மகரஜோதி வரை, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் செல்வது வழக்கம்.
மாலையிட்டு, தொடர்ந்து 48 நாட்களுக்கு விரதம் மேற்கொண்டு ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். தென்தமிழகத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக அதிகளவிலான வாகனங்களில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவார்கள். இதனையடுத்து தேனி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாவும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் போக்குவரத்து இடையூறு இல்லாமல் சென்று வருவதற்கும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.