பெரியகுளம் அருகே உள்ளது அகமலை ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட கண்ணக்கரை பகுதியில் இருந்து 5கி.மீ தொலைவில் மருதையனூர், சொக்கன் அலை, பட்டூர், படப்பம்பூர், அலங்காரம், சூலையூர் ஆகிய 6 மலைக் கிராமங்கள் உள்ளன. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட இந்த மலைக் கிராமத்தில், சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவர். இச்சூழலில் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் சாலை வசதி இல்லாமல் உள்ளது, இந்த மலை கிராமம். இதனால் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் உடல்நிலை சரி இல்லாமல் போனாலோ அல்லது பிரசவ நேரங்களில் பெண்கள் அவதிப்பட்டாலோ டோலி கட்டிதான் கண்ணக்கரைவரை கொண்டு வந்து, அங்கிருந்து ஜீப்பில் பெரியகுளம் செல்வர்.
சாலை வசதி இல்லாத நிலையில் உடல் நிலை சரியில்லாதவர்களை டோலி கட்டி தூக்கி வரும்போது பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பல ஆண்டுகளாக சாலை வசதி வேண்டி அப்பகுதி மக்கள் துணை முதலமைச்சரிடம் மனு அளித்து வந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, 2016ஆம் ஆண்டு கண்ணக்கரையில் இருந்து மருதையனூர் வரையில் உள்ள 2.5 கிமீ தூரத்திற்கு சாலை அமைக்க ரூ.6 கோடியே 70 லட்சத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டது.