வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. மேலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் நேற்று (நவ.16) அனைத்து இடங்களிலும் தொடர் மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு இதன் காரணமாக முல்லைப் பெரியாறு, சுருளியாறு, வைகை, சோத்துப்பாறை, கும்பக்கரை உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையால் 809 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 2,989கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் 123.10அடியாக உயர்ந்துள்ளது.
இதே போல் 885 கன அடி நீர்வரத்தாக இருந்த வைகை அணைக்கும் தற்போது விநாடிக்கு 1,087கன அடியாக அதிகரித்து நீர்மட்டம் 49.70அடியை எட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி(9.2மி.மீ), கூடலூர்(15.0மி.மீ), உத்தமபாளையம்(8.1மி.மீ), போடி(14.0மி.மீ), பெரியகுளம்(38.0மி.மீ), சோத்துப்பாறை(23.0மி.மீ), மஞ்சளாறு(8.0மி.மீ), வீரபாண்டி(13.2மி.மீ), தேக்கடி(30.0மி.மீ), பெரியாறு அணை(16.2மி.மீ), வைகை அணை(18.0மி.மீ) என அனைத்து பகுதிகளிலும் நேற்று(நவ.16) பெய்த மொத்த மழையளவு 204.9மி.மீ., சராசரியாக 17.1 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக பெரியகுளத்தில் 38.0மி.மீ மழை பெய்துள்ளது.
இதையும் படிங்க: ஆம்பூரில் இடைவிடாது பெய்த மழை... நிரம்பிய சிற்றாறுகள்... மகிழ்ச்சியில் மக்கள்