பழைய சாலையை அகற்றாமல் புதிதாக போடப்பட்ட சாலை தேனி:பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட வடகரை பகுதிகளான விஆர்பி நாயுடு தெரு, சௌராஷ்ட்ரா சத்திரம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது. குடியிருப்பு பகுதிகளில் தார் சாலைகள் அமைக்கும் பொழுது, பழைய தார் சாலைகளை அப்புறப்படுத்தி விட்டு அதன் மேல் புதிதாக தார் சாலை அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் முதலில் போடப்பட்ட தார் சாலைகளை அப்புறப்படுத்தாமல் அதன் மேலேயே புதிதாக தார் சாலை அமைக்கப்படுவதால், பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகள் அரை அடி முதல் ஒரு அடி வரை பள்ளத்தில் சென்று உள்ளது.
பழைய தார் சாலைகளை அப்புறப்படுத்தாமல் புதிதாக சாலை அமைப்பதற்கு பெரியகுளம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மழைக் காலங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெரியகுளம் குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் பெரியகுளம் நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படும் பொழுது மழைக் காலங்களில் வீடுகளுக்குள் மழைநீர், புகாதவாறு உரிய விதிமுறைகளை பின்பற்றி சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டும் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் விதிமுறைகளை பின்பற்றாமல் தார் சாலைகளை அமைத்து வருவதை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதிதாக சாலை அமைப்பது குறித்து பெரியகுளம் பகுதி மக்கள், “பழைய சாலையை அகற்றாமல் அப்படியே புதிய சாலை போடுவதால் எங்களது வீடுகள் 1 அடி பள்ளத்தில் சென்றுள்ளது. மேலும் அடுத்து வரவிருக்கும் மழைக் காலங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகும் நிலை உருவாகி உள்ளது.
இதன் காரணமாக வீட்டிற்குள் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீட்டிற்குள் நுழையும் அபாயம் உள்ளது. இதனால் பொது மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். இந்த பிரச்சினை குறித்து நகராட்சி ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:பள்ளி அருகே கழிவுகளை கொட்டும் அவலம்... குழந்தைகளின் சுகாதாரம் பாதிப்பு! புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா?