ஆண்டிபட்டியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் வர தாமதம் ஆனதால், 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த கர்ப்பிணிகள் பெரும் அவதியடைந்தனர் தேனி:சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணி திட்டத்தின் கீழ் ஊட்டசத்து மாத விழா 2023-ஐ முன்னிட்டு சமுதாய வளைகாப்பு விழா ஆண்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
காலை 10 மணிக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால், காலை 9 மணி முதல் ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதியில் இருந்து அரசு அலுவலர்கள் கர்ப்பிணிகளை அழைத்து வந்து மண்டபத்தில் அமர வைத்தனர். இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொள்வதாக இருந்தது.
இந்நிலையில், காலை 10 மணிக்கு துவங்க வேண்டிய விழா மதியம் ஒரு மணி வரை துவங்கவில்லை. இதனால் விழாவிற்கு வந்து மூன்று மணி நேரமாக ஒரே இடத்தில் காத்திருந்த கர்ப்பிணிகள், மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். இதையடுத்து பெண்கள் சிலர் கூட்டத்திலிருந்து எழுந்து வெளியே செல்ல முற்பட்டனர்.
இதனையடுத்து விழாவிற்கு வர வேண்டிய ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை, ஆண்டிபட்டி பேரூராட்த்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்காக காத்திருக்கும் கர்ப்பிணிகளின் சங்கடங்களையும், கர்ப்பிணிகள் விழாவிலிருந்து எழுந்து வெளியே செல்ல முற்படுவதையும் எடுத்துக் கூறினார்கள்.
உடனடியாக அங்கு காத்திருக்கும் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு முடிந்த பின்பு வழங்க வேண்டிய விருந்து உணவை அளிக்க உத்தரவு வந்தது. பின்னர் மண்டபத்தில் இருந்த ஊட்டச்சத்து அலுவலர்கள் கர்ப்பிணிகளுக்கு பூச்சூடி, சந்தனம் பூசி, வளையல் அணிவித்து வாழ்த்துப் பாடல் பாடி, அறுசுவை விருந்தளித்து காத்திருந்த கர்ப்பிணிகளை சமாதானப்படுத்தினார்கள்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் தவறான மாத்திரை பரிந்துரையா? கை, கால் செயலிழந்ததாக தொழிலாளியின் உறவினர்கள் குற்றச்சாட்டு..! தேனியில் நடந்தது என்ன?