போடிநாயக்கனூர் கொண்டரங்கி மல்லையா கோயில் பிரதோஷம் தேனி:புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று (செப். 27) 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த போடிநாயக்கனூர் அருள்மிகு கொண்டரங்கி மல்லையா சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் திருநீறால் அலங்கரிக்கப்பட்ட ஆறடி உயர சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அருள்மிகு கொண்டரங்கி மல்லையா சிவன் கோயில் அமைந்து உள்ளது. சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு, கொண்டரங்கி மல்லையா சிவபெருமானுக்கும், நந்திக்கும் அரிசி மாவு, அபிஷேகத் தூள், மஞ்சள் தூள், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், கனி, ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் விசேஷ வழிபாடுகள் நடைபெற்றன.
இதையும் படிங்க:சரக்கு பெட்டகங்களை கையாள்வதில் சாதனை! தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புது மைல்கல்!
மேலும், நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, ஆகிய வண்ண மலர்களால் பூ மாலை அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சமுக தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக கருவறையில் அமைந்துள்ள 6 அடி உயர சிவலிங்கத்திற்கு விபூதியால் காப்பு சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நந்தி வாகனத்தில் சிவன், பார்வதி உற்சவர் விக்ரகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். மேலும், பிரதோஷ பூஜைகளில் பங்கேற்ற அனைவருக்கும் திருக்கோயிலின் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.
பிரதோஷ தினத்தில் நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். எனவே, பிரதோஷ தினத்தில், கொண்டரங்கி மல்லையா சிவன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை நூற்றுக்கணக்கான மக்கள் நேரில் கண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
இதையும் படிங்க:ரூ.2000 செல்லாது எதிரொலி! திருச்செந்தூர் கோயில் உண்டியல் திறப்பு! காணிக்கையாக ரூ.2 கோடி வசூல்!