தேனி மாவட்டம் பெரியகுளம் இந்திராபுரி தெருவைச் சேர்ந்தவர் சுரேந்தர். பாலிடெக்னிக் கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர் அஜீத்குமாருடன் நேற்று முன்தினம் (ஜூன் 12) தேனியில் இருந்து பெரியகுளத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது லட்சுமிபுரம் பகுதியில் ஒரு பிரிவைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இதில் சாலையோரம் நின்றிருந்த முதியவரின் மீது இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் உரசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கிருந்த மக்கள் இளைஞர்களின் சாதியை சொல்லி திட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் இளைஞர்கள் காயமடைந்தனர். அங்கிருந்த காவல் துறையினர் இளைஞர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனை அனுப்பிவைத்தனர்.
இளைஞர்கள் மீது சாதி வெறி தாக்குதல் இதனைத் தொடர்ந்து இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (ஜூன் 13) பெரியகுளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பெரியகுளம் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இந்நிலையில், பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் இளைஞர்களை தாக்கியதாக சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.