Theni Vadugapatti clashes:தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சி பகுதியில் பகவதி அம்மன் கோயில் தெருவில் நேற்று மாலை ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பொங்கல் வைத்து மாடுகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். அதற்காக அந்த சாலையில் வாகனங்கள் செல்லாதவாறு சாலையில் குறுக்கே சிலர் கயிறுகள் கட்டியிருந்தனர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, போக்குவரத்தை தடை செய்து கட்டப்பட்டிருந்த கயிற்றை அப்புறப்படுத்தும்படி கூறியபோது, இரண்டு தாப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், இருசமூகத்தினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் அசாதாரணமான நிலைமை ஏற்பட்டதால் நேற்று இரவு முதல் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இன்று (ஜன.17) காலையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டபோது, சாலையில் கயிறு கட்டிய சமூகத்தினரை கைது செய்யக்கோரி கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே இரு சமூகத்தினரும் மாறிமாறி கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இதனால், சம்பவ இடத்தில் பெரியகுளம், போடி, தேனி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் விரைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுட்டனர்.