தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட அனுமதி மறுப்பு - ஓபிஎஸ் ஊரில் வெடித்த சர்ச்சை! - காவல்துறை சர்ச்சை கடிதம்

தேனி:பெரியகுளம் அருகே உள்ள தென்கரை கிளை நூலகத்தில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடினால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என விழாவிற்கு அனுமதி மறுத்து காவல்துறை வழங்கியுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

police-permission-refused-for-periyar-birthday-function

By

Published : Sep 17, 2019, 5:48 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை கிளை நூலகத்தை அப்பகுதி மக்களும் பள்ளி மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலகத்தில் பெரியார், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

அந்தவகையில் இந்த ஆண்டும் பெரியார், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இன்று விழா கொண்டாடப்பட இருந்தது. கூடவே,தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர் விஜயராஜுக்குப் பாராட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. இவ்விழாவிற்கான அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது.

விழா அழைப்பிதழ்

மேலும், இவ்விழாவிற்கு அனுமதி கோரி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தென்கரை காவல்துறையினரிடம் மனு கொடுத்திருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று கூறி அதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை காவல்துறையினர் கொடுத்துள்ளனர்.

அக்கடிதத்தில்,'தென்கரை கிளை நூலக வளாகம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய இடம் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

காவல் துறை சார்பில் வழங்கப்பட்ட கடிதம்

இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறும் போது," அண்ணாவும்,பெரியாரும் பிரச்னை ஏற்படுத்தக்கூடியவர்களா? அனுமதி மறுத்ததற்கான காரணம் அபத்தமாக உள்ளது" என்று ஆதங்கத்தோடு கூறுகின்றனர். பெரியார் பிறந்தநாள் விழாவிற்கு அனுமதி மறுத்த சம்பவம் பொதுமக்களிடையேவும், சமூகவலைதளங்களில் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க:

தேசிய மொழியாகுமா இந்தி? - அமித் ஷா பேச்சால் சர்ச்சை

ABOUT THE AUTHOR

...view details