தேனி: கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் பணி புரிந்து வருகிறார். அதாவது இவர் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நாள்தோறும் பைனான்ஸ் நிறுவனம் சார்பில், கொடுக்கப்பட்ட கடனுக்கான பணம் வசூலிக்கும் பணியினை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பரமசிவம் தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியரான கண்ணன்(20) என்பவரை மோட்டார் பைக்கில் அழைத்துக் கொண்டு, இருவரும் வசூல் செய்த கடன் பணமான ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு நாராயணத்தேவன்பட்டியில் உள்ள செல்லாயியம்மன் கோயில் அருகே வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த சாலையில் நின்றிருந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கண்ணன் மற்றும் பரமசிவத்தின் மீது மிளகாய் பொடியைத் தூவியுள்ளனர்.
அப்போது, மிளகாய்ப் பொடி கண்களில் விழுந்ததால் கண்ணன், பரமசிவம் இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த ரூபாய் இரண்டு லட்சம் ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டு, பரமசிவத்தின் இருசக்கர வாகனத்தில் தப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், இந்த வழிப்பறி சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில், பரமசிவம் புகார் அளித்துள்ளார்.