தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மாதங்களுக்கு பிறகு உற்பத்தியை தொடங்கியுள்ள பெரியாறு நீர் மின்நிலையம்!

தேனி : முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதால் 5 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த பெரியாறு நீர் மின்நிலையத்தில் மின் உற்பத்தி தற்போது தொடங்கியுள்ளது.

5 மாதங்களுக்கு பிறகு உற்பத்தியை தொடங்கியுள்ள பெலியாறு நீர் மின்நிலையம்!
5 மாதங்களுக்கு பிறகு உற்பத்தியை தொடங்கியுள்ள பெலியாறு நீர் மின்நிலையம்!

By

Published : Aug 1, 2020, 6:59 PM IST

தமிழ்நாடு - கேரள எல்லையோர பகுதியான தேக்கடியை அடுத்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்கிற இந்த அணையிலிருந்து 4 ராட்சத குழாய்கள் வழியாக கொண்டு வரப்படும் நீரால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் உள்ள பெரியாறு நீர் மின்நிலையத்தில் மின் உற்பத்தியும் நடைபெறுகிறது.

இந்த மின் நிலையத்தில் உள்ள 4 ஜெனரேட்டர்களில் தலா 42 மெகாவாட் வீதம் மொத்தமாக 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கோடை காலம் தொடக்கத்தில் இருந்தே அணையின் நீர்ப்பிடிப்பபு பகுதிகளில் போதிய அளவு மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு பகுதிகளுக்கு குடிநீருக்காக மட்டும் 125 கன அடி நீர் திறக்கப்பட்டன.

இதனால் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் லோயர்கேம்ப் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சப்பாத்து, வல்லக்கடவு, ஆனவச்சால் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரத் தொடங்கி தற்போது 115.25 அடியாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கான தண்ணீர் திறப்பு அளவு 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 மாதங்களாக நிறுத்தப்பட்ட பெரியாறு மின் நிலையத்தில் உற்பத்தி இன்று (ஆகஸ்ட் 1) முதல் தொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 4 ஜெனரேட்டர்களில் 3ஆவது ஜெனரேட்டரில் மட்டும் தற்போது மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.25 அடியாக (நீர்தேக்க அனுமதிக்கப்பட்ட அளவு 142) உள்ளது. அணையின் நீர் இருப்பு 1772 மி கனஅடியாக இருக்கிறது. அணைக்கு நீர் வரத்து 438 கன அடியாக உள்ள நிலையில் 300 கன அடி நீர் திறக்கப்படுவதாக பொதுப்பணித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தேக்கடியில் 7.8மி.மீ, பெரியாறு அணைப்பகுதியில் 13.4மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details