தேனி: மழையால் குறுமிளகு வரத்து குறைவு: விலை உயர்ந்து காட்டத்தை ஏற்படுத்தியுள்ளது! தேனி:வறட்சி காரணமாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் குறுமிளகு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் குறு மிளகின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மிளகு உற்பத்தி விலை உயர்ந்தாலும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏலக்காய் விலை உயர்வைத் தொடர்ந்து குறுமிளகு விலையும் அதிகரித்துள்ளது.
போடிநாயக்கனூரைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளான குரங்கணி, டாப் ஸ்டேஷன், போடி மெட்டு மற்றும் கேரளப் பகுதிகளான வண்ட மேடு, பியல்ராவ், பூப்பாறை ராஜா காடு, கஜானா பாறை போன்ற பகுதிகளில் மிளகு அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் கேரள எல்லைப் பகுதிகளில் விளைகின்ற குறுமிளகு மிகுந்த காரத்தன்மையும், மருத்துவ குணமும் நிறைந்ததால் உலக நாடுகளில் இதற்கு தனி மதிப்பு உள்ளது.
ஏலத் தோட்டத்தில் உள்ள மரங்களில் துணைப் பயிராக வளர்க்கப்படும் குறுமிளகு, மத்திய அரசின் நறுமண உற்பத்தி பொருட்கள் அமைப்பு கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஏலக்காய் போன்று இதுவும் பணப்பயிர்களின் ஒன்றாக கருதப்படுவதாலும், முக்கிய ஏற்றுமதி பயிராக திகழ்வதாலும் மத்திய அரசு நறுமண ஏற்றுமதி பொருள்களின் விதிமுறைகள் இதற்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: எண்ணும் எழுத்தும் திட்டம்: பி.எட் மாணவர்களைக் கொண்டு நடத்தக்கூடாது - ஆசிரியர்கள் கோரிக்கை
தற்போது தேனி மாவட்டம் மற்றும் கேரள இடுக்கி மாவட்டப் பகுதிகளில் வறட்சியான சூழல் நிலவுவதால் மிளகு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு கிலோ ஒன்றிற்கு 430 முதல் 450 ரூபாய் வரை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கிலோவிற்கு 150 முதல் 200 ரூபாய் வரை விலை உயர்ந்து முதல் தர மிளகு கிலோ ஒன்றிற்கு 650 ரூபாய் வரை கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
வெளிச்சந்தையில் 520 ரூபாய் வரை விற்கப்பட்ட மிளகு, தற்போது அதன் தரத்தைப் பொறுத்து 680 முதல் 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது. போதிய மழையின்மை காரணமாக மிளகு சாகுபடி குறைந்து வருவதால், மேலும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்ந்தாலும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். போடிநாயக்கனூரில் ஏலக்காய் விலை உயர்வைத் தொடர்ந்து தற்போது குறுமிளகு விலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!