தேனி மாவட்ட சீர்மரபினர் நலச்சங்கத்தினர் சார்பில் டி.என்.டி சான்றிதழ் வழங்குவதில் உள்ள குறைபாட்டை சரிசெய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகம் முன்பாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி செருப்பு மாலை அணிந்தவாறு போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமானவர்களை அங்கிருந்த காவல்துறையினர் அனுமதி மறுத்து, செருப்பு மாலைகளை கைப்பற்றி அப்புறப்படுத்தினர்.
இதனையடுத்து, ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "68 சமுதாயங்களை உள்ளடக்கிய சீர்மரபினர் மக்களுக்கு மத்திய அரசு டி.என்.டி சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், மாநில அரசு ஒ.பி.சி சான்றிதழாக வழங்கி வருகிறது. எனவே சீர்மரபினர் மக்களுக்கு ஒரே சான்றிதழான டி.என்.டி சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும், கடந்த மக்களவைத் தேர்தலின் போது மதுரை மாவட்ட உசிலம்பட்டி பகுதிக்கு வந்த முதலமைச்சர் பழனிசாமி டி.என்.டி அரசாணையில் உள்ள பிழைகளை நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார்.
ஆனால், கரோனாவை காரணம் காட்டி தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, அரசாணையை திருத்தி முழுமையான டி.என்.டி சான்றிதழ் வழங்கவும், டி.என்.டி சான்றிதழ் வழங்க அனைத்து வருவாய் அலுவலர்களுக்கும் விளக்க சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தொடர்ந்து, டி.என்.டி சான்றிதழ் வழங்க மறுத்தால் அமைச்சர்களின் வீடுகளில் முற்றுகை போராட்டம்" நடைபெறும் என எச்சரித்தனர்.