தேனி:தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மே மாதம், போடி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி உடலில் உள்ள அனைத்து தசைகளும் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதே போல் கடந்த ஜூன் மாதம் தேனி அருகே விசுவாசபுரம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் உடல் தசைகள் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு குழந்தைகளும் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அனைத்து பரிசோதனைகளையும் செய்த மருத்துவர்கள், குழந்தைகளுக்கு மிகவும் அரிதாக வரக்கூடிய குல்லியன் பார் சிண்ட்ரோம் (Guillain Barre Syndrome) என்ற தசைகளை பலம் இழக்க செய்யும் நோய் தாக்கி இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து இரண்டு குழந்தைகளுக்கும் நரம்பு பாதிப்பை குறைக்கச் செய்யும் விலை உயர்ந்த ஐ.வி.ஐ.ஜி (IVIG - Intravenous immunoglobulin) என்ற மருந்தை அளித்தனர்.
மேலும் தசை செயலிழப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டுவிட கூடாது என்று செயற்கை சுவாசம் அளித்தனர். குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சை தேவைப்படவே மூச்சுக்குழாயில் துளையிட்டு அதன் மூலம் செயற்கை சுவாசம் அளித்தனர்.
மேலும் மூக்கு, இரைப்பை குழாய் மூலம் கிருமி தொற்றை கட்டுப்படுத்த உயர்தர ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் அளிக்கப்பட்டு, அதற்கான இயன்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த குழந்தைகள் படிப்படியாக குணம் அடைந்து தற்போது முற்றிலும் குணமடைந்து உள்ளனர்.