தேனி:தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் ஶ்ரீஏழைகாத்தம்மன், ஶ்ரீவல்லடிகாரசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
கடந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற வேண்டிய ஜல்லிக்கட்டு போட்டி கரோனா நோய் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி அரசின் வழிகாட்டுநெறிமுறைகளுக்குப்பட்டு இன்று (ஜன.24) நடத்தப்பட்டது. தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறைகள் மாடுபிடி வீரர்களால் உறுதிமொழியாக எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் காளையான வல்லவர் அவிழ்த்து விடப்பட்டு மாடுபிடி வீரர்கள் காளையை தொட்டு வணங்கினர். பின்னர் ஜல்லிக்கட்டுக்கான மாடுகள் இறக்கிவிடப்பட்டது. வாடிவாசலில் இருந்து துள்ளித்குதித்த காளையுடன் வீரர்கள் மல்லுக்கட்டி நின்று விளையாடினர்.