தேனி: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (66) மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (செப்டம்பர் 1) காலமானார்.
இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,வி.கே. சசிகலா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு நேற்று மாலையில் எடுத்துவரப்பட்ட விஜயலட்சுமியின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.
விஜயலட்சுமியின் பூத உடலுக்கு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஓபிஎஸ் மனைவியின் உடல் தகனம் அஞ்சலி செலுத்திய பிரமுகர்கள்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் - ஐ. பெரியசாமி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முத்துசாமி ஆகிய அமைச்சர்கள் - செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், வீரமணி, சம்பத், செம்மலை உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், விவசாய சங்கத்தினர் என ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியும் ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதலும் கூறிச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடல் பெரியகுளத்தில் எரியூட்டப்பட்டது. முன்னதாக அவர்கள் குல வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமரவைக்கப்பட்ட நிலையில் டிராக்டரில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
எரியூட்டப்பட்ட உடல்
தென்கரை தெற்கு அக்ரஹாரம், தேவர் சிலை, காந்தி சிலை, தண்டுப்பாளையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பெரியகுளம் நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக அவரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் அரசுப் பேருந்து கழகப் பணிமனை அருகேயுள்ள நகராட்சிக்குச் சொந்தமான மயானத்தில் வைத்து கோவை காமாட்சிபுரி ஆதீனம் தலைமையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் மகனும், தேனி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத், அவரது தாய் விஜயலட்சுமியின் உடலுக்கு எரியூட்டினார்.