தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிடிவி தினகரனுக்கு தூது.. தேனியில் திடீர் ஆலோசனை கூட்டம்.. ஓபிஎஸ்-ன் அதிரடி ஆக்‌ஷன்! - ops and ttv dinakaran compromise

தேனியில் உள்ள பண்ணை வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதிமுக அதிகார மோதல் விவகாரத்தில் வரும் 24-ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தவுள்ள நிலையில் ஓபிஎஸ்-இன் இந்த ஆலோசனை கூட்டம் அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 15, 2023, 8:46 AM IST

தேனி:திருச்சியில் வரும் 24-ஆம் தேதி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முப்பெரும் விழா என்ற பெயரில் மாபெரும் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டில் தேனி மாவட்டத்திலிருந்து கட்சி நிர்வாகிகள் அழைத்து வருவது குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனி மாவட்ட அதிமுக சார்பில் ஓபிஎஸ் நியமனம் நகர், ஒன்றியம், பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், 24 ஆம் தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகள் அவரவர்கள் பகுதியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் முழுமையாக ஆட்களை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். சசிகலா மற்றும் டிடிவியிடம் முதலமைச்சர் பதவியைப் பெற்ற பின்பு ஏமாற்றியவர்கள் என எடப்பாடி தரப்பை விமர்சித்த ஓபிஎஸ், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவை சசிகலா வலியுறுத்தி வருவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், தமிழகத்திற்கு முழுமையாக ஜல்லிக்கட்டு பெற்று தந்தவர் மோடி தான் என்றும் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் என்றால் அது பாரத பிரதமர் மோடி தான், தான் அல்ல எனத் தெரிவித்தார். மேலும், தேனி மாவட்டத்தில் கட்சி நிதி திரட்டுவதற்காக பல கட்சிகள் தொழிலதிபர்களிடம் கையேந்தி நிற்கும் நிலையில், யாரிடமும் கையேந்தாமல் தேனி மாவட்டத்தை முழுமையாக நிர்வகிக்கும் பொறுப்பை எப்படி தன்னிடம் விட்டுச் சென்றார்களோ அதே நிலையில் யாரிடமும் கையேந்தாமல் நிர்வகித்து வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அடிக்கடி சென்னை செல்லும் போதெல்லாம் மாவட்ட செயலாளர் சையது கான், டிடிவி தினகரனை சந்திப்பார், தான் இதுவரையிலும் அவரை தடுக்கவில்லை எனக் கூறிய போது குறுக்கிட்ட மாவட்ட செயலாளர் சையது கான் "நான் எங்கு சென்றாலும் எப்பொழுதும் உங்களிடமே இருப்பேன்" எனக் கூறினார். அதன் பிறகு பேசிய ஓபிஎஸ் நீங்கள் எங்கு சென்றாலும் எங்கள் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்றிணைத்து விடுங்கள் என சையது கானிடம் ஓபிஎஸ் தெரிவித்தார்.

ஏற்கனவே திருச்சி மாநாட்டிற்கு வி.கே.சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக கூறி வரும் நிலையில் டிடிவி தினகரனுடன் சமாதானம் பேச தேனி சையது கானை தூது அனுப்பும் தொனியில் ஓ.பன்னீர்செல்வம் பேசி இருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:"4 ஆடு மேய்த்தால் ரூ.3.75 லட்சம் வாடகை வீட்டில் இருக்கலாமா?" - அண்ணாமலையை விளாசிய செந்தில் பாலாஜி!

ABOUT THE AUTHOR

...view details