தேனி:கோடநாடு கொலை வழக்கை கண்டித்து இன்று (01.08.2023) தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் மற்றும்டிடிவி தினகரன் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இரு அணியினரும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். அதில் கோடநாடு கொலை வழக்கில் திமுகவின் மெத்தனப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து நடத்தும் முதல் கூட்டம் என்பதால், தேனி மாவட்டத்தில் இருந்து ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், ''அருமை நண்பர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. நான் பிறந்தது தஞ்சை என்றாலும் எனது அரசியல் மண் தேனி மாவட்டம் தான்.
அன்று அம்மாவோடு இருந்த தொண்டர்கள் இன்று 90 சதவீதம் பேர் எங்களோடு தான் இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் 3 மாதங்களில் கோடநாடு கொலைக் குற்றவாளிகளைப் பிடிப்போம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால், இன்னும் பிடிக்கவில்லை. ஓபிஎஸ் தொண்டர்கள் மற்றும் அமமுக தொண்டர்கள் நமக்குள் இருக்கின்ற வருத்தங்களை எல்லாம் மறந்து இன்று ஒன்றிணைந்து இருக்கிறோம்.