தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் களமிறங்கியுள்ளார். இதற்கிடையே தனது அரசியல் எதிரியான ஓ.பன்னீர்செல்வத்தின் மகனை தோற்கடிக்க டிடிவி தினகரன் கடுமையான வியூகங்களை வகுத்துவருவதாக தகவல்கள் வெளியாகின. அதனையடுத்து, ”தேனியில் தானே களமிறங்கினாலும் களமிறங்குவேன்” என டிடிவி கூறியிருந்தார்.
இதனையடுத்து அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் தேனி மக்களவைத் தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ்ஸின் சொந்த தொகுதியான தேனியில் அவரது செல்வாக்கை உடைக்க தங்க தமிழ்ச்செல்வன்தான் சரியான நபர் என தினகரன் கருதுவதால் அவரை களமிறக்கி ஓபிஎஸ்ஸுக்கும் அவரது மகனுக்கும் செக் வைத்துள்ளார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.